Sunday, November 3, 2013

மாங்குளத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

மன்னார் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மன்னார் நகரில் கஞ்சா வைத்திருந்த ஒருவர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டதுடன் இவரிடமிருந்து ஒரு கிலோ 560 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் மன்னார் தாழ்ப்பாடு பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இவர் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை நேற்றையதினம் மன்னார் சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மாங்குளம் மல்லாவி வீதியில் 5 கிலோ 150 கிராம் கஞ்சாவுடன் கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மாங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன் இன்றையதினம் சந்தேகநபர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பு புறக்கோட்டையில் விபசார விடுதி சுற்றி வளைப்பு 9 பெண்கள் கைது!

கொழும்பு–புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குண சிங்கபுர, ஒல்கொட் மாவத்தை பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த விபசார விடுதியொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளதோடு, அங்கிருந்த ஒன்பது பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விபச்சார விடுதியில் இருந்து சீதுவ, அங்குலான, மாதம்பே, தலவாக்கலை மற்றும் கடுவெல பகுதிகளைச் சேர்ந்த 23 – 48 வயதுகளுக்கு இடைப்பட்ட பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த புறக்கோட்டை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பிரித்தானியாவுக்கு பயணம் செய்வோர் மூவாயிரம் பவுண்ட்ஸ்களை பிணைப் பணமாக செலுத்த வேண்டும் என்ற கட்டாய திட்டம் ரத்து!

இலங்கை, இந்தியா உட்பட ஆறு நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு பயணம் செய்வோர் மூவாயிரம் பவுண்ட்ஸ்களை பிணைப் பணமாக செலுத்த வேண்டும் என்ற கட்டாய திட்டம் ரத்துச் செய்யப்படுவதாக பிரித்தா னிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், கானா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்வோருக்கு ஆறு மாத கால விசாவை வழங்க பணத்தை வைப்புச் செய்யும் திட்டம் ஒன்றை பிரித்தானிய அரசாங்கம் கடந்த ஜூன் மாதம் முன்வைத்திருந்ததுடன், அதனை நவம்பர் மாதம் அமுல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் தெரேசா தெரிவித்திருந்தார்.

6 மாத கால விசா வழங்கப்படும் நபர்கள் அந்த அனுமதி காலத்தையும் தாண்டி பிரித்தானியாவில் தங்கியிருந்தால் வைப்புச் செய்த அந்த பணத்தை அரசாங்கம் பறிமுதல் செய்யும் என அந்ததிட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விசா காலம் முடிந்து தொடர்ந்தும் பிரித்தானியாவில் தங்கியிருப்போர் அங்கு தங்கியிருப்பதை தடுக்கும் வகையில் இந்த திட்டத்தை கொண்டு வருவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வந்தாக உள்துறை அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் இந்த திட்டத்தை அமுல்படுத்த இடமளிக்க போவதில்லை என துணைப் பிரதமர் நிக் கிளாக் அழுத்தங்களை கொடுத்ததை அடுத்தே அரசாங்கம் இந்த திட்டத்தை கைவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படுகாயமடைந்த அதிபர் வைத்தியசாலையில் அனுமதி!

வரக்காபொலை பாபுல் ஹசன் மத்திய கல்லூரி அதிபர் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், வரக்காபொலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலைக்கும் அங்கிருந்து பேராதனை போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட் டுள்ளார்.

அவருடைய வீட்டுக்கு சமீபமாக வீதியோரத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிளொன்று இவரை மோதியுள்ளது இதனால் அவருடைய இடது முழங்கால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரி விக்கப்படுகின்றது.

இக்கல்லூரியில் சுமார் 11 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் முதலாம் தர அதிபரான இவர் ஆசிரியர் சேவையில் சுமார் 33 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் ஆவார். அடுத்த சில மாதங்களில் ஆசிரியர் செவையிலிருந்து ஓய்வு பெறவுள்ள அவர் பாடசாலையில் நடைபெறவிருந்த அபிவிருத்தி சங்க கூட்டம் மற்றும் பெற்றோருக்கிடையிலான விசேட கூட்டத்தில் வருகை தரவிருந்த போதே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.

வரக்காபொலை ஆதார வைத்தயிசாலையிலோ கேகாலை தள வைத்தியசாலை யிலோ முறிவு சம்பந்தமான மருத்துவர்கள் எவரும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

பொதுநலவாய நாட்டு தலைவர்களின் ஆரம்ப நிகழ்வு தாமரை தடாக அரங்கில்!

பொதுநலவாய நாட்டு தலைவர்கள் அமர்வுகளின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 15ம் திகதி தாமரைத் தடாக அரங்கில் ஆரம்பமாக உள்ளதுடன் இந்த நிகழ்வுக்கு 50 மில்லியன் ரூபாவரை செலவிடப்பட உள்ளது.

நான்கு மணித்தியாலங்கள் வரை நடைபெறவுள்ள ஆரம்ப நிகழ்வுகளுக்காக மட்டும் ஐம்பதில் மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளுக்கு சமாந்திரமாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன் கண்காட்சிகள், அமர்வுகள், கருத்தரங்குகள், உணவு விழாக்கள், கலாச்சார நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் வீடுகளை அழிக்கும் செயற்பாடுகளில் இராணுவம் ஈடுபடவில்லை: இராணுவப் பேச்சாளர்!

யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளும் முயற்சிகளிலோ அல்லது, வீடுகளை அழிக்கும் செயற்பாடுக ளிலோ தாங்கள் ஈடுபடவில்லை என, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வர்ணகுளசூரிய தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கும் குற்றம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரி வித்தார்.

இராணுவத்தினர் சிங்கள குடியேற்றத்தை மேற்கொள்வதற்கான வீடமைப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகவும், தமிழ் மக்களின் குடியிறுப்புகளை அழித்து வருவதாகவும், ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டு வந்தன. எனினும் இராணுவத்தினர் அவ்வாறான செயற்பாடுகள் எவற்றிலும் ஈடுபடவில்லை என தெரிவித்தார்.

மேலும் இராணுவ முகாமின் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலேயே நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும், ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வர்ணகுளசூரிய குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற வாகன விபத்தில் 8 பேர் காயம்!

மட்டக்களப்பு செட்டிபாளையம் பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும், தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இந்த விபத்தில் 8 பேர் காயமடைந் துள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த பஸ்ஸும், கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த பஸ்ஸும், ஒன்றுடன் ஒன்று மோதியுதிலியே விபத்து ஏற்பட்டுள்ளதுடன், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இன்று காலை நடைபெற்ற இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதையில் இடம்பெற்ற முதல் விபத்து!

அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கொழும்பு - கட்டு நாயக்க அதிவேக வீதியில் முதல் விபத்து இன்று பதிவாகி யுள்ளது. நீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்று இன்று பகல், நிலைதடுமாறி சாலையின் இருபுறமும் உள்ள கட்டுகளில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து இடம்பெற்ற போது காரினுள் சாரதி மற்றும் பெண்ணொருவரும் இருந்துள்ளனர். எனினும் அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீதுவ பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(ஏடீ)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த வைத்தியசாலையின் 25வது ஆண்டு வெள்ளிவிழா டிசம்பர் மாதம் 14 திகதி - இஷாரத்

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த வைத்தியசாலையின் 25வது ஆண்டு வெள்ளிவிழா பொது வைபவம் டிசம்பர் மாதம் 14ஆந் திகதி கோலாகலமாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறி சேன பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த வைத்தியசாலை 1988 ஆம் ஆண்டு அப்போதைய முல்லை தீவு மாவட்ட அமைச்சராக இருந்த முன்னாள் வர்த்தக வாணிப அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரினால் பிரசவ விடுதியாக ஆரம்பிக்கப்பட்டு அமைச்சர் மன்சூரின் அழைப்பின் பேரில் 1988நவம்பர் 05ஆம் திகதி அப்போதைய சுகாதார அமைச்சர் ரேணுகா ஹேரதினால் திறந்து வைக்கப்பட்டது.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் அங்கத் தவர்கள் முன்னாள் அமைச்சர் மன்சூரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவை சந்தித்து இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்கான நேர அனுமதியை பெற்றுக் கொடுத்துள்ளார்

டிசம்பர் 14ஆம் திகதி நடை பெறவுள்ள இவ்விழாவில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த வைத்தியசாலையின் ஸ்தாபகரும் கல்முனையில் கனவான் அரசியல் பணி செய்தவருமான முன்னாள் அமைச்சர் மன்சூர் உட்பட இந்த வைத்திய சாலை அபிவிருத்திக்கு அர்பணிப்பு செய்த அத்தனை பேரும் பாராட்டப்படுவ தோடு நினைவு மலரும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த வைத்தியசாலையின் வெள்ளி விழா வைபவத் தையொட்டி வைத்தியசாலையின் உட்கட்டுமான அபிவிருத்தி பணிகள் வைத்திய சாலை அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நசீர் தலைமையில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தன் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்திய ஆசிரியயை எரித்துக் கொன்ற உதவிப் பொலிஸ் உத்தியோகத்தர்!

இந்தியாவில் உதவிப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது பாலியல் புகார் கொடுத்த ஆசிரியை ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இடிஸ்ரி என்ற ஆசிரியை ஒரிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் டெலாங் என்ற இடத்துக்கு பயிற்சிக்காக வந்து அங்குள்ள பாடசாலையில் சேர்ந்து பணி புரிந்து வந்தார்.

இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஆசிரியை மீது ஒரு கண் இருந்தது. இந்த நிலையில் அவர் பலவந்தமாக மானபங்கம் செய்து ஆசிரியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திவிட்டார். தண்டசேனா ஏற்கனவே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர். இதுபற்றி ஆசிரியை பொலிசில் புகார் செய்தார். ஆனால் பொலிசார் கண்டு கொள்ளவில்லை.

இதற்கிடையே தன் மீதான புகாரை வாபஸ் பெறுமாறு உதவிப் பொலிஸ் உத்தியோகத்தர் மிரட்டல் விடுத்தார். அவரது மிரட்டலுக்கு பயப்படாத ஆசிரியை புகாரை வாபஸ் பெற மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த உதவிப் பொலிஸ் உத்தியோகத்தர் கூலிப்படையை ஏவி ஆசிரியை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக தனது ஆட்களை ஏற்பாடு செய்தார். அவர்கள் ஆசிரியை மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்தனர். இதில் 90 சதவீத தீக்காயம் அடைந்த அவர் விசாகப்பட்டினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 5 நாட்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

இந்த விவகாரம் பற்றி அறிந்த முதலமைச்சர் நவீன் பட்நாயக் குற்றபிரிவு பொலிஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆசிரியை புகார் மீது நடவடிக்கை எடுக்காத பொலிஸ் இன்ஸ் பெக்டர் சுஜித்கு மார்காய் பணிநீக்கம் செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டார். வழக்கு விசாரணை விரைவு கோர்ட்டில் துரிதமாக நடத்தவும் உத்தவிடப்பட்டுள்ளது.

புகார் அளிக்கப்பட்ட உதவிப் பொலிஸ் உத்தியோகத்தர் தண்ட சேனா தலை மறைவானார். ஆந்திரா ஒடிசா எல்லையில் இச்சாபூர் என்ற இடத்தில் பதுங்கி இருந்த அவரை பொலிசார் கைது செய்தனர். ஆசிரியை எரித்துக் கொன்ற கூலிப்படை கும்பலை தேடிவருகிறார்கள்.

Saturday, November 2, 2013

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவிருப்பும் விக்னேஸ்வரனின் செயற்பாடுகளைக் குழப்பாதீர்கள் - வல்லிபுரம்

மிக நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் தென்னிலங்கை அரசாங்கத்துடன் இணங்கிச் சென்று தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுத்து அம்மக்களின் அபிலாஷை களைப் பூர்த்தி செய்யவதற்கு முன்வந்துள்ள வட மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களது செயற்பாடுகளைக் குழப்பி தமிழ் மக்களை மீண்டுமொரு முறை யுத்தம், உயரிழப்பு, இடம்பெயர்வு என்ற அவஸ்த்தைக்குள் தள்ளிவிட வேண்டாமென தமிழ்மக்கள சார்பாக வல்லிபுரம் என்பவர் தமிழ் ஊடகங்களிடம் தயவான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்

இது தொடர்பாக தமிழ் ஊடகங்களின் முக்கியஸ்தர்களுக்கு வெள்ளவத்தையில் வசிக்கும் வல்லிபுரம் என்பவரால் கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சில தனியார் தமிழ் ஊடகங்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசாங்கத்துடன் இணங்கிச் செல்லும் அரசியலுக்கு முன்வந்துள்ளதை விரும்பாத நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் இதே கருத்தைக் கொண்டுள்ள சிலருடன் இணைந்து குழப்பும் சதிமுயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது எனவும், அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் முதலமைச்சர் விக்னேஸ்வரனது இணங்கிச் சென்று காரியம் சாதிக்கும் அரசியலுக்கு, தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் கூட்டுக் கட்சிகளின் தலைவர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் விக்னேஸ்வரன் இணைந்து செயற்படுவாரானால் தமிழர்களுக்கு வெற்றிதான்! கே.பி

நட்பு ரீதியான அணுகுமுறையே தமிழர்களுக்கான எதிர்கால தீர்வை நிர்ணயிக்கும் எனவும், தற்போதைய தலைவர்களான ஜனாதிபதியும், வட மாகாண முதலமைச்சரும், வடக்கில் உள்ள தனியார் காணிகளை மீள அதன் உரிமையாளர்களுக்கு வழங்கி, நியாயமான குடியேற்றத்தை உறுதிப்படுத்தி, அதற் கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு பொருத்தமானவர்கள் என புலிகள் இயக்கத்தின் முன்னாள் வெளிவிவகார பொறுப் பாளர் கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் வட மாகாண சபையின் கன்னி அமர்வின்போதும் அதன் பின்னரும் ஆற்றிவரும் உரைகள், எதிர்காலம் நோக்கி சாதகதன்மையை வெளிப்படுத்தி இருப்பதாகவும் வடக்கில் யுத்தத்தால் பாதிக் கப்பட்ட மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசுடன் இணைந்து வேலைத் திட்டங்களை வட மாகாண சபை உருவாக்க வேண்டும் எனவும் கே.பி தெரிவித் துள்ளார்.

தலிபான் பயங்கரவாத தலைவர் ஹக்கீமுல்லா கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் அமெரிக்கா மீது சீறிப் பாய்கின்றது!

அமெரிக்ப்படையினரின் ஆளில்லா விமானம் மேற்கொண்ட தாக்குதலில் தலிபான் அமைப்பின் பாகிஸ்தான் தலைவர் கொல்லப்பட்டமையானது, தனி ஒரு நபரின் கொலையாக இதனை கருத முடியாது எனவும், இந்த நடவடிக்கை வளர்ச் சியடைந்து வரும் சமாதான பேச்சுவார்த்தைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித் துள்ளது.

அத்துடன் சமாதான பேச்சுவார்த்தை தொடர்பில் தலிபானியர்களுடன் கலந்துரை யாடுவதற்கு பாகிஸ்தான் உயரதிகாரிகள் சிலர் வஷிரிஸ்தான் பகுதிக்கு விஜயம் செய்யவிருந்தனர். இந்நிலையிலேயே தலிபான் தலைவர் கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறான முக்கியமான தருணத்தில் அமெரிக்கா மேற்கொண்ட குறித்த செயற்பாடானது, பாகிஸ்தானின் சமாதான பேச்சுவார்த்தையை மூழ்கடித்தமை போன்றதென பாகிஸ்தான் உட்துறை அமைச்சர் சௌத்ரி நிசார் அலி கான் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை நாட்டின் சமாதான பேச்சுவார்த்தையை முடக்குவதற்காக அமெரிக்க மேற்கொள்ளும் இவ்வாறான ஆளில்லா விமானத் தாக்குதல்களினால் தாம் ஒருபோதும் தோல்வியடையப்போவதில்லையென பாகிஸ்தான் தகவல்துறை அமைச்சர் பர்வேஷ் ராஷிட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்ப்படையினரின் ஆளில்லா விமானம் மேற்கொண்ட தாக்குதலில், தலிபான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவரான ஹக்கீமுல்லா மசுத் உட்பட மேலும் பலர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.